Pages

Subscribe:

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

விண்டோஸ் இயக்க அமைப்புடன் உபுண்டுவை(Dual Boot) நிறுவியவுடன் GRUB ஆனது உபுண்டு இயக்க அமைப்பை முதண்மை இயக்க அமைப்பாக மாற்றிவிடும்.கணிணியின் தொடக்கத்தில் நமக்கு வேண்டிய இயக்க அமைப்பை குறிப்பிட்ட சில விநாடிகளுக்குள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.நாம் இயக்க அமைப்பை தேர்ந்தெடுக்க தவறினால் உபுண்டு இயக்க தளத்திற்குள் தானாக சென்று சென்றுவிடும்.

ஆனால் சிலருக்கு(இதில் நானும் ஒருவன்) சில வன்பொருள் பிரச்சனைகளால் இயக்க அமைப்பை தேர்ந்தெடுக்கும் திரை ஆனது தெரியாமல் கருப்பு நிறத்தில் தோற்றம் அளிக்கும்.சில விநாடிகளுக்கு பின்பே பயணர்களின் முகப்பு திரை தோற்றம் அளிக்கும்.
உபுண்டு 11.10 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் startup manger என்னும் மென்பொருளை பயன்படுத்தி இந்த பிரச்சனையை தீர்க்கலாம்.புதியதாக வெளிவந்துள்ள 12.04-வில் startup manger யை பயன்படுத்த இயலவில்லை.இதனை சரி செய்ய இனையத்தில் தேடிய பொழுது 12.04வில் startup manger செயல்படாது என்றும் அதற்கு பதிலாக Grub Customizer பயன்படுத்துதலே சிறந்த வழி என்றும் தெரிந்த்து.

Grub Customizer நிறுவும் முறை:

உபுண்டு டெர்மினல் மெனுவில் சென்று பின்வரும் கோடுகளை பயன்படுத்தவும்

sudo apt-add-repository ppa:danielrichter2007/grub-customizer 
sudo apt-get update 
sudo apt-get install grub-customizer

மென்பொருளை நிறுவ முயற்சிக்கும் பொழுது பயணர் கடவு சொல்லை கொடுக்கவும்.

Grub Customizer யை நிறுவிய பின் அதனை உபுண்டு மெனுவில் சென்று பெறலாம்




Preference மெனுவை தேர்ந்தெடுத்து  இயக்க அமைப்பையும் அதன் விநாடிகளையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம்.

லினக்ஸ் மின்ட் 13"மாயா"விலும் இதனை பயன்படுத்தலாம்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" (1) -ராஜ் சிவா


         இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாக உற்றுப் பாருங்கள். தரையில் விரிக்கப்படும் ஒரு கம்பளம் (Carpet) என்று இதை நீங்கள் நினைத்தால், இனி நான் எழுதப் போவதை நிச்சயம் படிக்க வேண்டிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள். கம்பளம் போல, அச்சு அசலாக இருக்கும் இது கம்பளமே அல்ல. 'சரி, கம்பளம் இல்லை. அப்படியென்றால் காகிதம் ஒன்றில் வரையப்பட்ட ஒரு சித்திரம்' என்று மறுபடி நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தாலும், நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்.
 
        கம்பளமும் இல்லை. காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் இல்லை. அப்படியென்றால் இது என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய ஆய்வுடன்தான், நம் பயணம் இந்தத் தொடரில் ஆரம்பமாகப் போகின்றது. இந்தத் தொடர், நான் இதற்கு முன்னர் எழுதிய 'மாயா மக்கள்' பற்றிய தொடரைப் போல, மர்மங்களை (Mystery) உள்ளடக்கிய ஒன்றாகவே இருக்கும். அதனால் மீண்டும் மிஸ்டரி என்பது பற்றி ஒரு சிறிய விளக்கத்தை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். 
 
                    'மிஸ்டரி' என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம் போன்றது. அதன் ஒரு பக்கம், அறிவியலால் விளக்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டது. அடுத்த பக்கம், 'சே! இதெல்லாம் ஏமாற்று வேலை. இப்படி எதுவும் இல்லை' என்ற மறுதலிப்பைக் கொண்டது. எப்போதும் இந்த இரு பக்கங்களும் இல்லாமல், சரி சமமாக நிற்கும் நிலைக்குத்து நிலையில் இந்த நாணயம் நிற்பதே இல்லை. கடவுளை நம்புபவர்கள் எப்படி அதில் நம்பிக்கையுடன் இருப்பார்களோ, அப்படி ஒரு பக்கத்தினரும், கடவுளை மறுப்பவர்கள் எப்படி வன்மையாக மறுப்பார்களோ, அப்படி அடுத்தவர்களும் இருப்பார்கள். இப்படியான தன்மையுடைய மிஸ்டரி சம்பவங்களையே நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

              நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது. இனி தொடருக்குப் போகலாமா....?

                       மேலே இருக்கும் படத்தில் காணப்படும் சித்திரம் நிச்சயமாகக் கம்பளம் கிடையாது. அது காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் கிடையாது. ஆனால் அது ஒரு வரையப்பட்ட சித்திரமேதான். எங்கே? எப்படி? யாரால்? அது வரையப்பட்டது என்பதுதான் இங்கு நம் விழிகளை விரியச் செய்யப் போகும் ஆச்சரியமாக இருக்கப் போகிறது. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், தென்மேற்கு இங்கிலாந்தில் (South West England) அமைந்துள்ள 'வைல்ட்ஷையர்' (Wiltshire) என்னுமிடத்தில் வசிக்கும் 'டோனி ஹ்யூஜெஸ்' (Tony Huges) என்னும் விமானிக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.  
  


               டோனி ஹ்யூஜெஸ் என்பவர் 'மிக இலகு விமானம்' (Microlight flight) ஒன்றின் மூலம், வைல்ட்ஷயரில் உள்ள வயல் நிலங்களுக்கு மேலாக விமானத்தில், ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குப் பறந்து சென்றார். இப்படி வயல் வெளிகளின் மேலாகத் தினமும் பறந்து செல்வது அவரின் வழக்கங்களில் ஒன்று. மறு கோடிக்குப் பறந்து சென்ற டோனி, விமானத்தைத் திருப்பி, வந்த இடத்துக்கே செலுத்திக் கொண்டிருந்த போது, அவர் வயல்வெளியில் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. பத்து நிமிடங்களுக்கு முன்னர் அவர் அதே வயல்வெளியின் மேலாகப் பறந்து சென்றார். ஆனால் அதே இடத்துக்குத் திரும்பி வரும்போது அது காணப்பட்டது. "இது எப்படி சாத்தியம்?" என்று தன் வயர்லெஸ் சாதனத்தில் அலறினார். அவர் அந்த வயல்வெளியில் கண்டது என்ன தெரியுமா? மிகப் பிரமாண்டமான ஒரு சித்திரத்தை. அந்தச் சித்திரம் வயல்வெளியில் வட்டவடிவமாக வரையப்பட்டிருந்தது. எதனால் வரையப்பட்டிருந்தது என்று நினைக்கிறீர்கள்?  
            அதுதான் இங்கு சொல்லப்படப் போகும் மர்மத்தின் ஆணிவேரே! அந்தச் சித்திரம் வயல்வெளியில் செழித்து வளர்ந்த பயிர்களைச் சிதைக்காமல், நிலத்தில் அழுத்தி வரையப்பட்டிருந்தது. நிலத்தில் இருந்து பார்க்கும்போது என்னவென்றே தெரியாமல், வானத்தில் பறந்தால் மட்டுமே தெரியக் கூடிய வகையில் வரையப்பட்ட மிகப் பிரமாண்டமான சித்திரம் அது. டோனி ஹ்யூஜெஸினால் நம்பவே முடியவில்லை. பத்து நிமிடங்களில், அதுவும் பட்டப் பகலில் அதை யார் அப்படி வரைந்திருக்க முடியும்? சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு வாகனமோ, மனித நடமாட்டமோ காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பரந்து விரிந்த வயல்வெளிப் பிரதேசம். கோதுமைப் பயிர் எங்கும் பயிரிடப்பட்டு, செழித்து வளர்ந்த அறுவடைக்கான நேரம் அது. 
 
           
யார் வரைந்திருக்க முடியும்? இப்படி ஒரு பிரமாண்டமான சித்திரத்தை, 'வரைவது' என்று சொல்வதே தப்பு. யார் இப்படியான ஒன்றை உருவாக்கியிருக்க முடியும்? சரி, அப்படி உருவாக்கியிருந்தாலும் உருவாக்கியவர்கள் எங்கே? எப்படி மாயமாக மறைந்தார்கள்? விமானத்தில் பறந்தபடி எங்கு தேடியும் எவரையும் காணவில்லை. பத்து நிமிடங்களில் யாரும் அப்படி மறைந்து விட முடியாது. டோனி, தான் கண்டதை வயர்லெஸ் கருவி மூலமாக கன்ட்ரோல் அறையுடன் தொடர்பு கொண்டு கூறியதும், அலறியடித்து அனைவரும் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி, மௌனமாக வயல்வெளியில் படுத்து இருந்தது அந்த வயல் சித்திரம்.
      
          'பயிர் வட்டம்' (Crop Circle) என்னும் பெயருடன் உலகையே இப்போது மிகப் பலமாக மிரட்டி வரும் மிஸ்டரியாக இந்தப் பயிர்ச் சித்திரங்கள் இருக்கின்றன. இந்தச் சித்திரங்களின் பிரமாண்டத்தை நீங்கள் அறிய வேண்டுமா....? அவை எவ்வளவு பெரியவை என்பது தெரிய வேண்டுமா? சரி கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள். இதுவும் அதே வைல்ட்ஷையரில் உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டம்தான். 



       என்ன பார்த்தீர்களா? எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். ஒரு காகிதத்தில் கூட இப்படி வரைவது மிகக் கஷ்டமாக இருக்கும் வேளையில், மிகத் துல்லியமாகப் பயிர்களால் இப்படி உருவாக்க முடியுமா? சரி, இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லையா? அப்படியென்றால் அந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். மையத்துக்குச் சற்றுக் கீழே உள்ள வெள்ளைப் பகுதியில், இரண்டு சிறிய கருப்புப் புள்ளிகள் போலத் தெரிகிறதா? அந்தப் புள்ளிகள் என்ன தெரியுமா? அவை இரண்டும் மனிதர்கள்.  
         மனிதர்கள் இவ்வளவு சிறிய புள்ளிகளாகத் தெரிய வேண்டும் என்றால், அந்தச் சித்திரத்தின் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் மேலே கால் பகுதியாக தந்த கம்பளம் போன்ற அமைப்புள்ள சித்திரத்தின் முழுமையான வடிவத்தையும் கீழே தருகிறேன். அதையும் பாருங்கள். அதன் பிரமாண்டமும் தெரிய வேண்டும் அல்லவா? அப்படியே மையத்துக்கு நேராகக் கீழே இருக்கும் நான்கு இதழ்கள் கொண்ட பூ வடிவத்தைப் பாருங்கள். அதிலும் ஒரு கருப்புப் புள்ளி தெரியும். அதுவும் மனிதன் என்பது புரியும். 



   

                    "இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சித்திரம். இதை ஏதோ மர்மம் என்று சொல்லி எங்களை இவர் ஏமாற்றப் பார்க்கிறார்" என்று இப்போது நீங்கள் நினைக்கும் சாத்தியம் உண்டு. நீங்கள் அப்படி நினைக்கவும் வேண்டும். சந்தேகப்படுதல் என்பதுதான் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் நாம் இதை அறிவியல் சிந்தனையுடன் அணுகும்போது, அதன் மர்மங்கள் தொடர்ச்சியாக நீண்டு கொண்டு போகின்றது. அத்தோடு, நம்மை அது தாக்கவும் தொடங்குகின்றது. அந்தத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு கணத்தில் சோர்ந்து போய், நாம் அதை நம்ப வேண்டிய சூழலுக்குள்ளாவதுடன் அதன் சுழலுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்வோம். 

       அப்படி நம்மைத் தாக்கப் போகும் அந்த மர்மங்கள்தான் என்ன? அவை உங்களுக்குத் தெரிய வேண்டுமல்லவா? தெரிந்தால் நீங்கள் எப்படியான உணர்வுக்கு உள்ளாவீர்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அப்படியான அதிர்ச்சிகள் அவை.   
அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போமா...? 

-நன்றி திரு.ராஜ் சிவா&உயிர்மை.காம்

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1)

நன்றி திரு.ராஜ் சிவா&உயிர்மை.காம் 


புதிய தொடர்
இன்னும் ஒரிரு மாதங்களில், 2012ம் ஆண்டு புதுவருடமாகப் பிறக்கப் போகிறது. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.


"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.


என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும்,ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?
ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.


ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்?யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன.அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.


சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத,கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.
அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா……..!


                                                                                                                             அடுத்த தொடர்...


'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (2)


நன்றி திரு.ராஜ் சிவா&உயிர்மை.காம்


முற்குறிப்பு: நான் எழுதப் போகும் மாயா பற்றிய இந்தத் தொடர் பற்றி,உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம், எடுத்த எடுப்பிலேயே மறுக்க வேண்டும் என்று தயவுசெய்து உடன் மறுக்க வேண்டாம். இந்தத் தொடரை நான் முடிக்கும் வரை பொறுத்திருங்கள். பலருக்கு இது பகுத்தறிவுக்கு ஒத்துவராத, அறிவியல் ஒத்துக் கொள்ளாத சம்பவங்களாக இருக்கும். உண்மைதான். நானும் உங்களைப் போன்ற அறிவியலை நம்பும் ஒருவன்தான். எனவே முடிவு வரை பொறுத்துக் கொண்டு, இதை வாசியுங்கள்.
கடந்த தொடரில், சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி.மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன்.இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி.1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான்.அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, 'தஞ்சைப் பெரிய கோவில்'என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.ஆனால் இது........! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா....?ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.
அந்தப் படம் இதுதான்........!





"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல"என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா...? இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.அவை என்ன தெரியுமா……..?மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார்.இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.


ஏதாவது தெரிகிறதா? அல்லது புரிகிறதா…?
நவீன யுகத்தினர் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டின் வடிவை ஒத்ததும், அந்த ராக்கெட்டை இயக்கும் ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பிலும் ஒரு சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. அது சதுர வடிவிலான கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் சாதாரணமாக அப்படி அமர்ந்திருக்க எந்த ஒரு தேவையும் இல்லாத விதத்தில் அமைந்த சித்திரம் அது.மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.சரி, இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.அப்படி என்னதான் கிடைத்தன..?அதை அடுத்த தொடரில் பார்க்கலாம்……!

                                                                                                                           அடுத்த தொடர்...